Monday, August 6, 2012

அல்ஜன்னத் ஆகஸ்ட் 2012 மனம்திறந்தமடல்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)

வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் இப்புனிதமான ரமலான் மாதத்தில் எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்தருள்வானாக!

ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும். மார்க்கம் என்ற பெயரில் செய்யக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு தெளிவான ஆதாரம் குர்ஆனில் இருக்க வேண்டும், அல்லது அல்லாஹ்வுடைய தூதரின் வழிமுறையான சுன்னாவில் இருக்க வேண்டும். இந்த அடிப்படையை மக்களுக்குப் போதிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் ''ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்'' என்ற அமைப்பாகும்.

மக்கள் இஸ்லாத்தின் சரியான பாதையைத் தெரியாமலிருந்த போது அவர்களை நேர்வழிப் படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த அமைப்பை துவங்கினோம். எனவே இந்த அமைப்பில் பொறுப்பில் இருப்பவர்களும், உறுப்பினர்களாக இருப்பவர்களும் ஒவ் வொருவரும் தன்னைத்தானே கேட்க வேண்டும், அதாவது நான் இந்த அடிப்படையை சரியாகப் புரிந்திருக்கின்றேனா? குர்ஆனிலிருந்து எத்தனை விஷயங்கள் எனக்கு மனப்பாடமாக இருக்கிறது? எனக்கு குர்ஆனை ஓத வேண்டிய முறையில் ஓதத் தெரியுமா? அதிலே உள்ள வாழ்க்கை நெறியைப் பற்றிய சட்டதிட்டங்கள் எனக்குத்தெரியுமா? அதன்படி நான் செயல்படுகின்றேனா? என்றெல்லாம் தன்னைத் தானே கேட்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறே நாம் பின் பற்ற வேண்டிய அல்லாஹ்வுடைய தூதர் போதனையில் எத்தனை ஹதீஸ்கள் எனக்கு மனப்பாடம் இருக்கிறது? அல்லாஹ்வின் தூதர் காட்டிய நெறியின் பிரகாரம் என்னுடைய அன்றாட வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கின்றேனா? என்று சீர்தூக்கிப்பார்த்து செயல்படுவது கடமையாகும்.

புனிதமிக்க இந்த ரமலான் மாதத்தில் பரிசுத்த குர்ஆனை அதிகமாக ஒத வேண்டும். அதனுடைய பொருள் தெரிந்து ஓத வேண்டும், ஓதத் தெரியாதவர்கள் ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும். குர்ஆனை பார்த்து ஓதக்கூட தெரியாதவர்கள் குர்ஆன் ஹதீஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள், என்பதை உணர்ந்து எல்லோரும் செயல்பட வேண்டும். குர்ஆன் ஹதீஸ் அமைப்பில் உள்ளவர்களுக்கு குர்ஆன் கூட ஒதத் தெரியவில்லை என்ற விமர்சனம் வராதவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும். நமது மனைவி மக்களையும் குர்ஆனிய கல்வி கற்றவர்களாக மாற்ற பாடுபட வேண்டும்.

இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதாலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம் அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்க்கொண்டிருந்தார்கள் (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.
அல்குர்ஆன் 6:112

உங்கள் நலன் நாடும்
S.கமாலுத்தீன்மதனி

 

No comments:

Post a Comment