Monday, August 6, 2012

அல்ஜன்னத் ஆகஸ்ட் 2012 தலையங்கம்


கடவுளின் அணுத்துகள்கள்

கடவுளின் அணுத்துகள்கள் கண்டுபிடிப்பு என்ற தலைப்பில் சமீபத்தில் மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபஞ்சம் உருவாவதற்கு காரணமாக இருந்தது, கடவுளின் அணுத்துகள்தான். அதற்கு ''ஹிக்ஸ் போஸான்'' என்று பெயர் என இயற்பியல் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பிரமாண்டமான அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறியதில் தான் நாம் இருக்கும் பூமி உட்பட நட்சத்திரங்கள் கோள்கள் வழிமண்டலத்தில் நிலை கொண்டன என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த பேரண்டம் உருவாக மூல காரணம் எது? அதனுடைய துவக்கம் என்ன? என்பதைப் பற்றி ஆய்வு செய்வதில் விஞ்ஞானிகள் பல்லாண்டுகள் இடைவிடாது முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக ஏராளமான பொருளாதாரத்தை செலவு செய்து ஆய்வுமையங்களை நிறுவியுள்ளனர். இவர்களுடைய ஆய்வின் மூலம் இந்த பிரபஞ்சம் துவங்கியது 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் என்று குறிப் பிடுகின்றனர். இவர்களுக்கு இந்த புள்ளிவிபரம் யார் மூலம் கிடைத்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நீண்ட நெடிய காலமாக இயற்கை என்று சொல்க் கொண்டிருந்தவர்கள் எல்லாமே தானாகவே உண்டானது என்று கூறிக்கொண்டிருந்தவர்கள், தற்போது கடவுள் என்ற சொல்லைப் பயன்படுத்தி இந்த பிரபஞ்சம் உருவாக காரணம் 'கடவுள்'' தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்த பேரண்டம் அதில் காணப்படுகின்ற அனைத்து விதமான படைப்புகளும் தானாக உண்டாகவில்லை, அதை உண்டு பண்ணிய ஒருவன் இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால் இந்த உண்மைகளை 1433 வருடங்களுக்கு முன் அருளப்பட்ட இறை வேதமான பரிசுத்த குர்ஆனில் படைத்தவன் அல்லாஹ் தெளிவாக விளக்கிவிட்டான். அதற்கு தெளிவுரை வழங்கிய அல்லாஹ்வின் தூதர் அவர்களும் அதைக் குறித்து பல தகவல்களை மனித சமுதாயத்திற்கு வழங்கிச் சென்றுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:
''இறை நிராகரிப்பாளர்கள் சிந்தித்துப்பார்க்கவில்லையா?'' நிச்சயமாக வானங்களும் பூமியும் முதல்
ஒன்றாக இருந்தன. அவற்றை நாமே பிளந்தோம், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிருந்து படைத்தோம், இவற்றைப் பார்த்தும் அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டாமா? இன்னும் பூமி மனிதர்களைக் கொண்டு அசையாமருப்பதற்காக நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம், அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நாம் விசாலமான பாதைகளை அதில் ஆக்கினோம், இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதான மாக அமைத்தோம், எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளையும் புறக்கணித்து விடுகிறார்கள். இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான், வானில் தத்தமக்குரிய வழிமண்டலங்களில் அவை ஒவ்வொன்றும் நீந்திக் கொண்டிருக்கின்றன. அல்குர்ஆன் 21:30-33

மேலே கூறப்பட்டுள்ள இறை வசனங்களில் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? யார் அதை உருவாக்கியது? ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்த கோள்களைப்பிளக்கச் செய்தது யார்? விண்ணில் வழிமண்டலங்களில் மிகவும் நேர்த்தியாக துல்லியமாக தனது பணியைச் செய்து கொண்டிருக்கின்ற கோள்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இயக்கிக் கொண்டிருப்பவன் யார்? என்பதையெல்லாம் தெளிவாக இந்த வசனங்களில் படைத்தவன் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

புத்தியுள்ள மனிதனுக்கு படைத்தவனை நம்புவதற்கு இந்த வசனங்கள் போதுமானவை. எனவே
இவற்றையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டாமா? என்று கேட்கின்றான். எனவே படைத்தவனை நம்புவதற்கு மிகப்பெரிய ஆய்வுகள் நடத்த வேண்டிய தேவையில்லை, அல்லாஹ்வுடைய வசனங்கள் மட்டுமே போதுமானது.

No comments:

Post a Comment