Wednesday, March 6, 2013

அன்புள்ள கொள்கை சகோதர்களுக்கு..


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)
வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் நேரான பாதையைக் காண்பித்துத் தந்து, அதிலே என்றென்றும் நிலைத்து நிற்கச் செய்வானாக! இஸ்லாமைக் குர்ஆன் சுன்னாவின் ஒளியில் அதனுடைய தூய்மையான வடிவில் தெரிய வேண்டும். தெரிந்ததன் அடிப்படையில் வாழ வேண்டும். பிறரையும் அதன்படி வாழச் செய்ய வேண்டும் என்ற உன்னதமான இலட்சியத்தோடு 26ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கப்பட்ட அமைப்புத்தான் ''ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்'' என்ற அமைப்பு, இந்த அமைப்பின் பிரச்சாரத்தின் மூலமாக வல்ல அல்லாஹ்வின் பேரருளால் ஏராளமான சகோதர சகோதரிகள் இஸ்லாத்தின் தூய வடிவை தெரிந்திருக்கின்றார்கள். அதன்படி வாழவும் முன் வந்துள்ளார்கள். இந்த அமைப்பின் மூலமாக பல கல்வி நிறுவனங்களையும், சமூக சேவை மையங்களையும் நிறுவியுள்ளோம்,
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அதே நேரத்தில் இந்த அமைப்பில் நிர்வாகப் பொறுப்புகளில் இடம் பெறக்கூடியவர்கள் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும், நாம் எந்த அளவிற்கு இஸ்லாமோடு நெருக்கமாக இருக்கின்றோம்? இஸ்லாமின் முக்கிய கடமைகளை நிறைவேற்றுகிறோமா? தலையாய அன்றாட கடமையான தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுகின்றோமா? தொழுகையில் ஓதவேண்டிய குர்ஆன் வசனங்கள், பிரார்த்தனைகளை நன்றாக உச்சரித்து பொருள் தெரிந்து ஓதுகின்றோமா? குர்ஆன், ஹதீஸ் அமைப்பில் பொறுப்பில் இருப்பதாக பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நாம், எந்த அளவிற்கு குர்ஆனை மனப்பாடம் செய்திருக்கின்றோம்? குர்ஆனை நன்கு ஒதவாவது தெரியுமா? எத்தனை ஹதீஸ்களை மூலத்தோடு மனப்பாடம் செய்திருக்கின்றோம்? நம்மைச் சுற்றி இருக்கின்ற உற்றார் உறவினர்களுக்கு இஸ்லாமின் போதனைகளை எடுத்துச் சொல்வதற்கு எந்த அளவிற்கு முயற்சி செய்திருக்கின்றோம்? நமது சந்ததிகள் திருக்குர்ஆனை திறம்பட பாராயணம் செய்யக்கூடியவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக நாம் பாடு பட்டிருக்கிறோமா? மார்க்கக் கல்வி அழிந்து வரும் இந்த காலத்தில் நம் குடும்பத்தில் ஒருவரையாவது மார்க்கம் கற்ற அறிஞராக ஆக்குவதற்கு ஏதாவது முயற்சியை மேற்கொண்டுள்ளோமா? என்றெல்லாம் நம்மை நாமே கேள்விகளைக் கேட்டு, பதில் காண கடமைப்பட்டுள்ளோம். காரணம் காலம் போகிற போக்கில் எதிர்காலத்தில் 'குர்ஆன், ஹதீஸ்' என்ற அமைப்பை வழி நடத்துவதற்கு மார்க்கம் தெரிந்தவர்கள் இல்லாமல் போய் விடுவார்களோ, உலக ஆதாய சிந்தனைவாதி களின் கை ஓங்கி, நிர்வாகத்தை கையிலெடுத்து, தப்பும் தவறுமாக மக்களை வழி நடத்துகின்ற நிலை உருவாகி விடுமோ என்ற கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை ஒவ்வொரு நிர்வாகியும் ஒவ்வொரு உறுப்பினரும் சிந்தித்துச் செயல்படுமாறு அன்புடனும் கொள்கை உணர்வுடனும் கேட்டுக்கொள்கிறேன். வல்ல அல்லாஹ் இந்த அமைப்பை இறுதிவரை அவனுக்காகவும், அவனுடைய மார்க்கம் வளர்ந்தோங்குவதற்காகவும் செயல்படக்கூடியதாக ஆக்கியருள்வானாக! உங்கள்நலம்நாடும்
S.கமாலுத்தீன் மதனி

No comments:

Post a Comment