Wednesday, May 9, 2012

வாழ வைக்கும் கல்வியும் வயிற்றுப்பிழைப்பு கல்வியும்

இரவு பகலென பார்க்காமல் காலமெல்லாம் கஷ்ட்டப்பட்டு படித்து, புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து, ஆண்டுத் தேர்வு எழுதிவிட்ட மகிழ்ச்சியில் மாணவ மாணவியர் நிம்மதி பெருமூச்சு விட்டு விடுமுறை நாட்களைமகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில்பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், பள்ளிக்கூட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம், எந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம், இந்த காலத்தில் எந்த கல்வியைத் தேர்ந்தெடுத்தால் கைநிறைய ஊதியம் வாங்கலாம் நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

கல்லூரிகளிலே படித்து கரைகண்டவர்கள்? வேலைக்காக விண்ணப்பிப்பதும், வேலை தேடி அலைவதுமாக காணப்படுகிறார்கள். இப்படிப்பட்ட பரபரப்பான வாழ்க்கையை தான் மாணவ பருவத்தில் உள்ளவர்கள் கழிக்கிறார்கள். பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்களோ, தனது பிள்ளை எப்போது படித்து முடித்து ஒரு நல்ல வேலை யில் சேருவான். அவனுடைய வருமானத்தினால் குடும்ப சிரமத்தை போக்கிக் கொள்ளலாமே என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
பிள்ளைகள் பிஞ்சு பருவத்திலிருந்து வாலிப பருவத்தை அடைவதுவரை ஏறக்குறைய இருபது ஆண்டுகள் பள்ளி கல்லூரி என்றே அலைந்தது எதற்காக? என்று புத்தியுள்ளவர்கள், சிந்தித்துப் பார்க்க வேண்டும், எல்லாமே எண்ஜான் உடலை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் அவர்களுடைய இலட்சியமாக இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். அறிவியல் கண்டுப்பிடுப்புகளை வெளிவுலகிற்கு கொண்டுவருகின்ற கல்வியானாலும் தொழில் நுட்பங்களை முன்னேற்றுகின்ற கல்வியானாலும், மருத்துவ வளர்ச்சியை பெருக்குவதற்குரிய கல்வியானாலும், விவசாய அபிவிருத்தியை ஏற்படுத்துகின்ற கல்வியானாலும் இப்படி எந்த துறை சார்ந்த கல்வியானாலும் இவை எல்லாவற்றிற்கும் பின்னால் நிற்பது வயிற்றுப் பிழைப்புத்தான், இதன் மூலம் இவ்வுலகில் செழிப்பாக வாழலாம், உலகத்தை முன்னேற்றலாம், இவை எல்லாமே அழிந்து போகக்கூடியது தான். இந்த உலகத்திலேயே அனுபவித்து முடித்த தோடு சரி, இந்த கல்வியைக் கொண்டு மட்டும் என்றென்றைக்கும் நிரந்தரமாக வாழ வைக்கக்கூடிய மறுமை வெற்றியை அடைய முடியாது. மறுமையில் மனிதனை நிம்மதியாக வாழவைக்கின்ற கல்வி தான் உண்மையான கல்வி, மறுமையில் சொகுசான பேரின்ப வாழ்க்கையை அனுபவிக்கின்ற பாக்கியத்தை பெற காரணமாக இருக்கின்ற கல்வி தான் உண்மையான கல்வி, மறுமையில் பேரின்ப வாழ்க்கையை வழங்குகின்ற முழு அதிகாரத்தையும் தன்கையில் வைத்துள்ள படைத்த அல்லாஹ்வைப் பற்றியும், அவனுடைய திருபொருத்தத் தைப் பெறுவதற்கு காரணமாக இருக்கின்றவற்றையும் தெரிந்து கொள்ள உதவும், கல்விதான் பாக்கியத்திற்குரிய கல்வி, இந்த கல்வி இல்லாமல் வெறும் வயிற்றுப் பிழைப்புக் கல்வியை மட்டும் பயின்று விட்டு, இது நம்மை மறுமையில் நிம்மதியாக வாழவைக்கும் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம்.
வயிற்றுப் பிழைப்பு கல்விக்காக அயராது பாடுபடக் கூடியவர்கள், அதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடியவர்கள் அதற்கென ஏராளமான அமைப்புகளை உருவாக்கிச் செயல் படக்கூடியவர்கள் அந்த, கல்வி கற்கக் கூடியவர்களுக்கு உதவித் தொகைகளை வாரி வாரி வழங்குகின்ற இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவர்கள் இவர்கள் எல்லோரும் மறுமையில் மனிதனை வாழவைக்கின்ற கல்விக்காக என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்று சிறிது சிந்தித்துப்பார்க்கக் கடமைப் பட்டுள்ளார்கள். அந்த கல்வியை நமது பிள்ளைகளுக்கும், நமது சமுதாய மக்களுக்கும் கற்றுக் கொடுக்க ஆர்வம் காட்டியிருக்கின்றோமா? என்று சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். ஆனால் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், மறுமையில் வாழ வைக்கும் கல்வியை கற்பதில் தங்களை அற்பணிக்கின்றவர்களைப் பார்த்து இவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக கல்வி கற்பவர்கள் என்று தலைகீழாகவிமர்ச்சிக்கின்ற பல அதி மேதாவிகளைத் தான் சமுதாயத்தில் காண முடிகிறது.
”இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை வாழகைகும் விஷயத்தின் பால் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அழைப்புக் கொடுப்பார்களானால் அந்த அழைப்பிற்கு பதில் கொடுங்கள். அல்குர்ஆன் 8:24
அல்-ஜன்னத் மாத இதழ் மே 2012 – தலையங்கம்

No comments:

Post a Comment