Wednesday, May 9, 2012

அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல்…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் சகல பாக்கியங்களையும் வழங்கி அவனுக்கு நன்றிசெலுத்தும் மக்களாக ஆக்கியருள அவனிடம் வேண்டுகின்றேன்.
வாழ்க்கை என்பது பல கட்டங்களைக் கொண்டது. அதில் இளமைப் பருவம் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இந்த பருவத்தில் உள்ளவர்கள் தங்கள் முயற்சிகளை சரியான வழியில் செலவிடுவார்களானால் அவர்கள் நினைப்பதை அல்லாஹ்வின் அருளால் சாதிக்க முடியும். சூடேற்றப்பட்ட இரத்த நாளங்கள் முறுக்கேறி இருக்கின்ற பருவம், மனதில் எதையாவது நினைத்துவிட்டால் அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்ற பருவம் இந்த பருவத்திலுள்ள இஸ்லாமிய இளைஞர்களில் பலர் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் விரல் விட்டு எண்ணப்படுகின்ற ஒரு சிலர் மட்டுமே மார்க்க உணர்வோடு வாழ்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரையில் மார்க்கத்தை வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை தெரியாமல் இருந்து வருகின்றனர். இதனால் தவறான வழிகாட்டுதல் பக்கம் அழைத்துச் செல்லப்பட்டு தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு சரியான வழிகாட்டுவது அவசியமாகும்.
குர்ஆன், நபிவழியின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு சரியான முறையில் தெளிவான பாதையைக் காட்டி ஆகவேண்டும். மார்க்கத்தின் மீது பற்றுள்ள இளைஞர்களிடத்தில் வயது முதிர்ந்தவர்கள் பக்குவமாகப் பேசி அவர்களுடைய ஆர்வத்தை மெருகூட்ட வேண்டும், இளமையின் துடிப்பின் காரணத்தினால் அவர்களிடத்தில் ஏதாவது தவறுகள் காணப்படுமானால் அவற்றை தகுந்த முறையில் அன்போடு சுட்டிக்காட்ட வேண்டும். அவர்களிடத்தில் காணப்படும் மார்க்க ஆர்வம்
குறையும் விதத்தில் நாம் நடந்து கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புக்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்ற பொறுப்புணர்வோடு செயல்பட்டால் சமூகம் மறுமலர்ச்சி
பெற்று செழிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் நலன் நாடும்
S.கமாலுத்தீன் மதனி
அல்-ஜன்னத் மாத இதழ் மே 2012

No comments:

Post a Comment