Sunday, April 1, 2012

அல்லாஹ்-வின் அருளுக்குரிய நபித்தோழர்கள்!!

அல்-ஜன்னத் மாத இதழ் ஏப்ரல் 2012 – தலையங்கம்


அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் நேரடியாகப் பயிற்சி கொடுக்கப்பட்டு, வார்த்து எடுக்கப்பட்டவர்கள் தான் நபித்தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து திருக்குர்ஆன் வசனங்களை நேரில் ஓதக் கேட்டுப் பெற்றவர்கள். அல்லாஹ்வுடைய வேதமாகிய திருகுர்ஆன் உலக மக்கள் யாவருக்கும் பாதுகாப்பான முறையில் போய்ச் சேருவதற்கு அரும்பாடுபட்டவர்கள், நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை தங்கள் வாழ்க்கையில் முழுமையாகப் பின்பற்றியவர்கள் அத்தனை சிறப்பிற்கும் சொந்தக்காரர்கள் தான் நபித்தோழர்கள்.
அல்லாஹ்வுடைய பரிசுத்த வேதமாகிய குர்ஆன் பாதுகாக்கப்பட்டு உலகெங்கும் யாவருடைய கைகளிலும் காணப்படுகிறதென்றால் அதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்கள் தான் சத்திய நபித்தோழர்கள். அவர்கள் கொண்ட ஈமானிய உறுதிக்கு ஈடாக அவர்களுக்குப் பின்னால் யாரும் இருந்ததில்லை, அவர்களுடைய இறைநம்பிக்கையைப் போன்று யாரெல்லாம் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களே நேர்வழிபெற்றவர்கள் என அல்லாஹ் பாராட்டிக் கூறியுள்ளான். அல்குர்ஆன் 2:137
அவர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் புகழ்பெற்றவர்கள் என வல்ல அல்லாஹ் பாராட்டுகின்றான். தனது நபியின் தோழமைக்கும், அவருக்கு துணையாக நிற்பதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விட நேர்மைக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அல்லாஹ் பாராட்டிப் புகழ்ந்து கூறுபவர்களை விட சிறப்பிற்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
அல்லாஹ் கூறுகிறான்: ”முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராவார். அவருடன் இருப்பவர்கள் இறை நிராகரிப்பாளர்கள் மீது கண்டிப் பாகவும் தங்களுக்கிடையே இரக்கமுடையவர்களாகவும் இருப்பார்கள். குனிந்தும், நெற்றியை தரையில் வைத்தும் அல்லாஹ்வை வணங்கி, அவனுடைய அருளையும் அவனுடைய திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டக் கூடியவர்களாக அவர்களை நீர் காண்பீர், அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய நெற்றியில் சுஜுதின் காரணத்தினால் அடையாளம் ஏற்பட்டிருக்கும்” (அல்குர்ஆன் 48:29)
இறைத்தூதர்களுக்குப் பின்னால் படைப்புகளில் சிறந்தவர்களாக நபித்தோழர்கள் கருதப்படுகிறார்கள். காரணம் நன்மையான காரியங்களைச் செய்வதில் முந்திச் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். அந்த நன்மையான காரியங்களை அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஏற்று திருப்திப்பட்டுக் கொள்கிறான்.
”(நபித்தோழர்களான) முஹாஜிர்களிலும், அன்சார்களிலும் முதலாவதாக இறைநம்பிக்கைக் கொள்வதில் முந்திக்கொண்டவர்களும், அவர்களை நற்செயலில் பின் பற்றியவர்களும் இவர்கள் எல்லோரையும் அல்லாஹ் திருப்திபட்டுக்கொண்டான். அவர்களும் அவனை பொருந்திக் கொண்டார்கள். மேலும் அவர்களுக்காக சுவனபதிகளை தயார்படுத்தியிருக்கின்றான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அதில் என்றென்றும் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள், இதுவே மகத்தான வெற்றியாகும். அல்குர்ஆன் 9:100
சத்திய நபித்தோழர்களை மகத்தான வெற்றி பெற்றவர்கள் என்று வல்ல அல்லாஹ் புகழ்ந்து பாராட்டுகின்றான். அவர்களுடைய நற்செயல்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படக் கூடியவர்களையும் வெற்றியாளர்கள் என்றும், சொர்க்கத்திற்கு தகுதியுடையவர்கள் என்றும் பாராட்டிக் கூறுகின்றான்.
இப்படிப்பட்ட சத்திய சீலர்களை மட்டம் தட்டி இழித்துப் பேசக்கூடிய வனை விட கேவலமானவன் யாரும் இருக்க முடியாது. மறுமை நாளில் அல்லாஹ்வின் முன் இழிவானவர் களாகவே இவர்கள் கொண்டு வரப்படுவார்கள். உண்மையான இறை நம்பிக்கையாளன் நாம் நேர்வழிபெற்று உண்மையான மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு காரணமாக இருந்தவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பான். ”சத்திய நபித்தோழர்களுக்குப் பின்னால் வந்தவர்கள்” எங்கள் நாயனே! எங்களுக்கும் இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக! மேலும் இறை நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் நாயனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன் என்று பிரார்த்திப்பார்கள். அல்குர்ஆன் 59:10
இப்படிப்பட்ட நல்லோர்களின் வழியை எங்களுக்குக் காட்டுவாயாக! என்று தான் ஒவ்வொரு தொழுகையாளியும் தொழுகையில் நின்று கொண்டுபிரார்த்தித்து வருகின்றனர். எனவே நல்லோர்களான நபித்தோழர்களை மதிப்போம்.

No comments:

Post a Comment