Sunday, April 1, 2012

அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல்…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் நிறைவான நற்பாக்கியங்களையும் நலமான வாழ்க்கையையும் இம்மையிலும் மறுமையிலும் தந்தருள்வானாக!
நம்மில் இளைஞராக இருக்கின்ற ஒவ்வொருவரும் முதுமையை சந்தித்தே ஆக வேண்டும். சிறியவர்களாக இருப்பவர்கள் பெரியவர்களாக ஆவார்கள். ஒவ்வொரு முதியவரும் இளமையைக் கடந்து வந்தவர் தாம், இந்த மாற்றங்கள் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படக்கூடியவை வாழ்க்கையின் இந்த மாற்றத்தைத் திரும்பி பார்க்கின்ற ஒவ்வொருவரும் எத்தனையோ விதமான படிப்பினைகளைப் பெறுகின்றனர்.
இளமைப் பருவத்தில் உள்ள துடிப்பும், உணர்வுகளும் வயோதிகப் பருவத்தில் காணப்படுவதில்லை, எனவே இளமைப்பருவத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை இஸ்லாம் கொடுத்துள்ளது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ”உமக்கு முதுமை வருவதற்கு முன்னால் உன்னுடைய வாலிபத்தை பயன்படுத்திக்கொள்” மேலும் கூறினார்கள்: ”உன்னுடைய இளமையை எதில் செலவிட்டாய் என்று நீ மறுமையில் விசாரிக்கப்படுவாய்”. எனவே துடிப்புள்ள பருவத்திலுள்ள இளைஞர்கள் தனக்கு மூத்தவர்களையும் தன்னைவிட அறிவாற்றல் அனுபவத்தில் முதிர்ந்தவர்களையும், மதிக்கின்ற பண்புடையவர்களாக இருக்க வேண்டும். தள்ளாடுகின்ற பருவத்தை அடைந்துவிட்டவர்களைப் பார்த்து நகைப்பது, ஏளனம் செய்வது, மாபெரும் தவறு என்பதை இளைஞர்கள் புரிய வேண்டும். ”நாமும் ஒருநாளைக்கு இந்த நிலையை அடையத்தான் போகின்றோம் அந்த நேரத்தில் துடிப்புள்ள இளைஞர்கள் நம்மை மட்டம் தட்டி பேசினால் நம் நிலை எப்படி இருக்கும் என்பதை சிறிது யோசித்துப்பார்த்து செயல்பட வேண்டும்.
புத்தியுள்ள இளைஞர்கள் மூத்தவர்கள், முதியவர்களின் அனுபவங்களிலிருந்து பாடம் படிப்பார்கள். அவர்களை அன்போடு அணுகி கடந்த காலங்களில் அவர்கள் பாதை, அவர்கள் சந்தித்த அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முற்படுவார்கள். அதிலிருந்து பயனுள்ளதை எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு கிடைக்காத அரிய கருத்துக்கள் தன்னிடம் இருந்தால் அவற்றை அவர்களின் கவனத்திற்கு மென்மையான முறையில் எடுத்துச் செல்ல முற்படுவார்கள். இப்படிப்பட்ட அணுகுமுறைகள் இளைஞர்களிடம் காணப்படுவது அவசியமாகும்.
உங்கள் நலன் நாடும்
S.கமாலுத்தீன் மதனி

No comments:

Post a Comment