Tuesday, March 6, 2012

அல்லாஹ்-வின் பூமியில் வாழ உரிமையில்லையா?


நாம் வாழுகின்ற இந்த பூமி அல்லாஹ்வால் படைக்கப்பட்டது, அதிலுள்ள சர்வ பாக்கியங்களும் அவனால் உண்டாக்கப்பட்டவை. இவை அனைத்தையும் மனிதன் அனுபவிப்பதற்காகவே படைத்திருக்கின்றான்.
”உங்களுக்காகவே பூமியில் உள்ள அனைத்தையும் படைத்தான்” அல்குர்ஆன் 2:29
பூமியில் உள்ள அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்திருப்பதாவும் அல்லாஹ் கூறுகிறான். ”அல்லாஹ் அவன்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி அதன்மூலம் உங்களுக்குத் தேவையான பழவகைகளை உங்களுக்கு உணவாக வெளியாக்கினான். இன்னும் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்”. அல்குர்ஆன் 14:32
please visit www.jaqh.org
படைத்த அல்லாஹ்வின் பூமி விசாலமானது எங்குவேண்டுமானாலும் சென்று உங்களுக்குரிய வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளுங்கள், என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
”அவனே உங்களுக்கு பூமியை நீங்கள் வாழ்வதற்கு வசதியாக ஆக்கினான். எனவே அதன் பல பாகங்களிலும் சென்று அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள். அல்குர்ஆன் 67:15
அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா அதிலே நீங்கள் பரவிச்சென்று உங்களுக்குரிய வாழ்வாதாரத்தைத் தேடியிருக்க வேண்டாமா? என அல்லாஹ் கேட்கின்றான். அல்குர்ஆன் 4:97
ஆக அல்லாஹ்வின் பூமியில் நாம் வாழ்வதற்கு எந்த தடையுமில்லை, அல்லாஹ்வின் பூமியில் வாழ்வதற்கு யாரிடமும் போய் உரிமை கேட்கவேண்டிய அவசியமுமில்லை, யாரும் இந்த பூமியில் நிலையாக வாழப்போவதுமில்லை. பூமியில் பிறந்தவர்கள் எல்லாம் மரணித்து சென்று கொண்டேயிருக்கின்றனர்.
படைத்த நாயனான அல்லாஹ் அவனுடைய பூமியில் வாழ உரிமை வழங்கியது மட்டுமல்ல, எண்ணற்ற பாக்கியங்களையும் வழங்கியிருக்கின்றான். நாம் வாழ்வதற்காக பூமியை விரிப்பாக்கி வானத்தை முகடாக்கித் தந்துள்ளான். வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் தேவையான உணவு வகைகளையும் பழ வர்க்கங்களையும் காய்கறி வகைகளையும் படைத்துத்தந்தான். இவற்றை எல்லாம் நாம் அனுபவிக்கின்றோம். இன்னும் இதைப்போன்ற எத்தனையோ ஆயிரமாயிரம் பாக்கியங்கள்! அதற்காக படைத்த அந்த நாயனுக்கு முறையாக நன்றி செலுத்திவிட்டோமா?  நிச்சயமாக இல்லை. அவனுடைய பாக்கியங்களை அனுபவித்துவிட்டு அவனுக்கு நன்றி கெட்டவர்களாக மனிதர்கள் அல்லாஹ்வின் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹ் நமக்கு அறிவை தந்திருக்கின்றான். அந்த அறிவின் மூலம் சிந்தித்துப் பார்க்கின்ற உரிமை நமக்கு இருக்கின்றது. எத்தனைபேர் சிந்தித்துப் பார்க்கிறார்கள்? படைத்தவன் கொடுத்த உரிமை நமக்கு இருக்கின்றது. எத்தனைபேர் சிந்தித்துப் பார்க்கிறார்கள்? படைத்த அல்லாஹ்வை வணங்குவதற்கான முழு உரிமை நமக்கு இருக்கிறது. நம்மில் எத்தனைபேர் அல்லாஹ்வை முறையாக வணங்குகிறார்கள்? இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்ற நமக்கு எந்த தடையுமில்லை. ஆனால் அதை உதாசீனப்படுதுகின்றவர்கள் தான் நம்மில் அதிகம்.
நாம் பெற்ற உரிமைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதை விட்டுவிட்டு இல்லாத உரிமைகளுக்காக போராடுவது நன்றிகெட்ட செயல் அல்லவா? ”….நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயமாக நான் அதிகம் தருவேன். நீங்கள் நன்றிகெட்டு வாழ்ந்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானது”. அல்குர்ஆன் 14:7
அல்-ஜன்னத் மாத இதழ் மார்ச் 2012  தலையங்கம்

No comments:

Post a Comment