Wednesday, January 4, 2012


அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல்…

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் நேரான வழியைக் காண்பித்து அதில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கச் செய்தருள்வானாக!

நாம் எல்லோரும் அல்லாஹ்வை இறைவனாகவும், அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை தலைவராகவும், அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாமை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், நாம் எல்லோரும் லாயிலாஹ் இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்தவர்கள். அதில் தான் வெற்றிக்கு வழி இருக்கிறது என்று நம்பியவர்கள் அந்த அடிப்படையில் நாம் எல்லோரும் சகோதரர்கள் இந்த சகோதரத்துவ இணைப்பை நாம் எல்லோரும் உணர வேண்டும். இந்த இணைப்பு நாடு, மொழி, நிறம், குலம், குடும்பம் எல்லாவற்றையும் கடந்த இணைப்பாகும். இது ஏகத்துவ கலிமாவை மொழிந்து அதை நம்புவதால் ஏற்பட்ட இணைப்பு இந்த ஈமானிய இணைப்பைப் பலப்படுத்த நாம் எல்லோரும் பாடுபட வேண்டும், இதை பிறருக்கும் புரிய வைக்க வேண்டும்.

“மூமின்கள் எல்லோரும் நிச்சயம் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் (அல்குர்ஆன் 49:10) என வல்ல அல்லாஹ்குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கிடையில் சகோதரத்துவம் இருந்தாக வேண்டும் என வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இறை நம்பிக்கையாளர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டு தங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்தி சகோதரத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துக்கொள்ளக் கூடியவர்களிடம் உண்மையான இறை நம்பிக்கை இல்லை என்றே கருதப்படும். ஈமானுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஒருவர் நடந்து கொள்ளாதவரை அவரை எதிரியாகவும் பகைவராகவும், அவர் மீது வெறுப்புணர்வை கொட்டுவதும் மாபெரும் குற்றமாகும். இதுபோன்ற அணுகுமுறைகள் சமூகம் பிளவுபடுவதற்கும் சிதறுவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.

அற்ப விஷயங்களைக் காரணம் காட்டி, தனது ஈமானிய சகோதரனை வெறுப்பதும், அவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டவனைப் போல் பார்ப்பதும் இஸ்லாம் கண்டிக்கின்ற மாபெரும் குற்றமாகும். இதுபோன்ற அணுகுமுறைகள் மூலம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக் கூடியவர்களால் ஒரு போதும் இந்த சமூதாயத்தை ஒருங்கிணைக்க முடியாது.

சிறிய சிறிய விஷயங்களை காரணமாகக் கொண்டு சமுதாயத்தில் யார் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார்களோ அவர்கள் விஷயத்தில் சமுதாயம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூகக் கட்டுப்பாட்டை விரும்பக்கூடியவர்கள் ஒன்றுபட்ட வலுவான சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் என ஆசைப்படக்கூடியவர்கள் இஸ்லாமிய அடிப்படை கொள்கை விஷயத்தில் ஒன்றுபட்டு செயல்பட முன்வரவேண்டும்.

மூமின்களுக்கிடையில் சண்டைகளும், சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் இருந்து கொண்டேதான் இருக்கும் அவற்றை சரிசெய்து சீர்திருத்தி சிறந்த சமுதாயமாக மாற்றி அமைப்பது தான் சமுதாய நலன் விரும்பிகள் மீது கடமை.

உங்கள் நலன் நாடும்
S.கமாலுத்தீன் மதனி

அல்-ஜன்னத் மாத இதழ் டிசம்பர் 2011

No comments:

Post a Comment